“வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தத்தை கைவிடுக” - அன்புமணி


 சென்னை: வண்டலூர் - மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை குறைந்த மதிப்பில் தனியாருக்கு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு, அந்தச் சாலை அரசின் பராமரிப்பிலேயே தொடர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  • சென்னை வண்டலூர் - மீஞ்சூர் 60.15 கி.மீ. வெளிவட்டச் சாலை, சுமார் ரூ.2,526 கோடிக்கு 25 ஆண்டுகளுக்கு தனியாருக்கு வழங்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
  • 25 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி வருவாய் ஈட்டும் திறன் கொண்ட சாலையை மிகக் குறைந்த மதிப்பில் ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
  • இந்தச் சாலை 2011–2021 அதிமுக ஆட்சியில் ரூ.2,156.40 கோடி செலவில் இரண்டு கட்டங்களாக அமைக்கப்பட்டு தற்போது தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • கடந்த திமுக ஆட்சியில் இந்த ஒப்பந்தம் தொடங்கப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தற்போதைய அரசும் அதே முடிவை தொடர்வது அதிர்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
  • திட்டத்தின் பின்னணியில் பேரம் மற்றும் ஊழல் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், அவை வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
  • தற்போது தினசரி சுமார் 31 ஆயிரம் வாகனங்கள் இந்தச் சாலையை பயன்படுத்துகின்றன. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டும் நிலையில், சுங்க வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால், அரசுக்கே பெரும் வருவாய் கிடைக்கும் என்றார்.
  • கரூரில் பேசிய முதல்வர் விஜய், அதிக செலவில் வழங்கப்பட்ட மேம்பால ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக குறிப்பிட்டதை நினைவுபடுத்திய அவர், அதே அளவுகோல் இந்த ஒப்பந்தத்திற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

இறுதியாக, வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, அரசின் பராமரிப்பிலேயே தொடர்ந்து இயக்க வேண்டும். மேலும், சுங்கக் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Previous Next

نموذج الاتصال