கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு அண்ணாமலை ஆதரவு

 

சென்னை: கரூர் மாவட்டத்தில் உள்ள 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவகாரத்தில், சட்டப்பூர்வமாக ரயத்துவாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் குறித்து எழுந்துள்ள விவகாரத்தில், உண்மை நிலையை சட்டரீதியாக புரிந்துகொள்வது அவசியம். பேசப்படும் அனைத்து நிலங்களும் ‘திருக்கோயில் சொத்துகள்’ அல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்புடையவை.

விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்கள் காலத்தில், கோயில்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம், 1963-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.

அந்த பட்டாக்களின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக இந்த நிலங்களை சட்டப்பூர்வமாக சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், கடந்த ஆட்சியில் இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பு (Zero Value) பட்டியலில் சேர்க்கப்பட்டதால், பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

தற்போதைய தமிழக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்துவாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் பதிவுத் தடையை நீக்கி, விவசாயிகளின் உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டும். அதை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில், உண்மையான திருக்கோயில் சொத்துகள் எந்த வகையிலும் சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கோயில் சொத்துகளையும், சட்டப்பூர்வ உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையையும் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.

எனவே, சட்டப்பூர்வமாக ரயத்துவாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நீண்டகால பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் முக்கியமான நடவடிக்கையாக அமையும்.”

Previous Next

نموذج الاتصال