தஞ்சாவூர்: கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 2004 ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-வது ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
நினைவு தினத்தை முன்னிட்டு, தீ விபத்து நிகழ்ந்த பள்ளி வளாகம் மற்றும் பாலக்கரை நினைவு மண்டபத்தில் பெற்றோர், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் மலர்வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு அவர்களுக்கு விருப்பமான தின்பண்டங்களை வைத்து பெற்றோர் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தின.
உயிரிழந்த 94 குழந்தைகளின் புகைப்படங்களுடன் டிஜிட்டல் நினைவு பதாகையும் அமைக்கப்பட்டது. மாலை மகாமகக் குளத்தில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
உயிரிழந்த குழந்தைகளின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், ஜூலை 16-ஐ "குழந்தைகள் பாதுகாப்பு தினம்" ஆக அறிவிக்க வேண்டும், சேதமடைந்த நினைவு பூங்காவை மறுசீரமைக்க வேண்டும் மற்றும் கும்பகோணம் வட்டத்திற்கு இந்த நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தீ விபத்தில் இரண்டு குழந்தைகளை இழந்த பெற்றோர் இன்பராஜ், உயிரிழந்த 94 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தினார். இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.