போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மோதல் வன்முறையாக வெடிப்பு; சிறப்பு விசாரணைக்கு உத்தரவு

 


கொழும்பு, ஜூலை 6:

இலங்கையின் மேற்கு கடற்கரை நகரமான நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற கைதிகள் மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கொழும்புக்கு அருகிலுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் சுமார் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும், அதற்கு எதிராக உள்ள குழுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் வன்முறையாக மாறியதாக கூறப்படுகிறது.

முதல் நாளில் ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளும் மோதல் வெடித்த நிலையில், உயிரிழப்பு 26 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 6 பேர் சிறை அதிகாரிகள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மோதலின்போது சில கைதிகள் சிறைக் காவலர்களிடமிருந்து துப்பாக்கிகளை பறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிறை வளாகத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரண்டதால் அங்கும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை மற்றும் கலவரத் தடுப்புப் பிரிவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் சில கைதிகள் பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறைத் துறை ஆணையரின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கைதிகள் மோதல் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைத் துறைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Previous Next

نموذج الاتصال