தென் மாநிலங்களை தண்டிப்பதா? தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டின் சுமார் 70 லட்சம் ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பை பாதிக்கும் என முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாதந்தோறும் வழங்கப்படும் 35 கிலோ உணவுத் தானிய ஒதுக்கீட்டை குறைக்கும் மத்திய அரசின் முன்மொழிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 


பிரதமர் மோடிக்கு கடிதம்; 70 லட்சம் ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படும் என எச்சரிக்கை

சென்னை | ஜூலை 6, 2026

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013-இல் மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய திருத்தம் தமிழ்நாட்டின் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களை கடுமையாக பாதிக்கும் எனக் கூறி, அந்தத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2026 ஜூன் 24-ஆம் தேதி வெளியிட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்பு (திருத்தம்) சட்ட வரைவின் மூலம், அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதந்தோறும் 35 கிலோ உணவுத் தானிய ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போதைய நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 35 கிலோ உணவுத் தானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் புதிய திருத்தத்தின்படி, ஒருவருக்கு மாதம் 7 கிலோ என்ற அடிப்படையில், அதிகபட்சம் 35 கிலோ வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 மட்டுமே இருப்பதால், இந்த மாற்றம் மாநிலத்தில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு கிடைக்கும் உணவுத் தானிய அளவை கணிசமாகக் குறைக்கும் என்று முதல்வர் விஜய் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. இதன் மூலம் சுமார் 69.27 லட்சம் ஏழை மக்கள் பயன்பெற்று வருகின்றனர். கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், பழங்குடியினர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட மிகவும் நலிவடைந்த பிரிவினரே இத்திட்டத்தின் பயனாளிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு 65,261 மெட்ரிக் டன் உணவுத் தானியங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், புதிய திருத்தம் அமலுக்கு வந்தால் அது சுமார் 42,040 மெட்ரிக் டன்னாக குறையும் என்றும், இதனால் சுமார் 70 லட்சம் ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார்.

மேலும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீட்டை நிர்ணயிப்பது, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களை தண்டிப்பதற்கு சமமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக வலுவான பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்தி, மக்களுக்கு தேவையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து வருவதாகவும், அரிசி தமிழ்நாட்டு மக்களின் அன்றாட உணவில் முக்கிய இடம் வகிப்பதால், இந்த ஒதுக்கீட்டைக் குறைப்பது ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்து, தற்போது நடைமுறையில் உள்ளபடி அந்தியோதயா அன்ன யோஜனா குடும்பங்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ உணவுத் தானியங்களை தொடர்ந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் சுமார் 70 லட்சம் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மாநிலத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال