சென்னை: சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அரசு செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு தனித்தனி மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் விஜய் அண்மையில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு, நோயாளிகள் மற்றும் தாய்மார்களுடன் கலந்துரையாடியதையும், குழந்தைகளை அன்புடன் கையில் ஏந்தி வாழ்த்தியதையும் பாராட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் முதல்முறையாக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்க சாதனை என்றும், பல்வேறு சவால்களை கடந்து மருத்துவர்கள் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த கருத்தரிப்பு மையத்திற்காக இதுவரை தனிப்பட்ட மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படாதது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், உடனடியாக ஒரு பேராசிரியர், ஒரு இணைப் பேராசிரியர் மற்றும் இரண்டு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய நடவடிக்கையை வரவேற்றுள்ள அவர், கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் அவர்களின் மனைவிக்கு நிவாரணமும், அரசு பணியும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், அரசு மருத்துவர்களுக்கு அரசாணை எண் 354-ஐ முழுமையாக அமல்படுத்தி, அதன்படி ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உரிய தீர்வு வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மருத்துவர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
