புழல் அருகே பாதாள சாக்கடைப் பணியில் விபத்து: ராட்சத குழாய் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு


 சென்னை: சென்னை மாநகராட்சியின் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வந்த புழல் அருகே காவாங்கரை கண்ணப்பசாமி நகர் பகுதியில் நிகழ்ந்த விபத்தில், ராட்சத கான்கிரீட் குழாய் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டு, கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதன் ஒரு பகுதியாக, 24-வது தெருவில் ராட்சத கான்கிரீட் குழாயை கிரேன் மூலம் பள்ளத்தில் இறக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, கிரேனில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென அறுந்ததால், கனரக குழாய் கீழே விழுந்தது.

அந்த நேரத்தில், கண்ணப்பசாமி நகர் முதல் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், தனது 3 வயது மகன் ஷாருக் ஈஸ்வரன் உடன் கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திடீரென விழுந்த குழாய் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் இருவரும் காயமடைந்தனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிறுவன் மேல்சிகிச்சைக்காக மாதவரம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும், சிகிச்சை பலனின்றி அதிகாலை 3 மணி அளவில் ஷாருக் ஈஸ்வரன் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கிரேனை இயக்கிய ஓட்டுநர் மற்றும் அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு நடைமுறைகளில் அலட்சியம் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous Next

نموذج الاتصال