ஹனோய்: வியட்நாமின் பு குவோக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தெற்கு வியட்நாமில் உள்ள ஹான் மே ரூட் ங்வோய் தீவிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது. தீவுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியபோது படகு திடீரென கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 4 பணியாளர்களும் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருப்பினும், அவர்கள் வருவதற்கு முன்பே அருகில் சென்றுகொண்டிருந்த பிற படகுகளில் இருந்தவர்கள் பலரை கடலில் இருந்து உயிருடன் மீட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் பலத்த காற்று மற்றும் உயரமான அலைகள் காணப்பட்டதால் மீட்புப் பணி சவாலாக இருந்ததாக வியட்நாமின் VN Express செய்தி வெளியிட்டுள்ளது. பலர் படகுக்குள் சிக்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிருடன் மீட்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக மாகாண அதிகாரி நுயென் டியென் ஹை தெரிவித்துள்ளார். பலத்த காற்று மற்றும் கடும் அலைகளே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய தூதரகம் உதவி எண்கள்
விபத்து தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் கட்டுப்பாட்டு அறை:
- +84 36 281 7930
- +84 91 552 3714
- +84 33 452 0414
ஹனோய் கட்டுப்பாட்டு அறை:
- +84 91 308 9165
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.