சிறுநீரக முறைகேடு வழக்கில் உரிய நடவடிக்கை: அமைச்சர் அருண்ராஜ் உறுதி

 

சென்னை:


சிறுநீரக முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் காரணமாக தற்காலிகமாக மந்தமானிருந்த விசாரணை தற்போது மீண்டும் முழு வீச்சில் தொடங்கியுள்ளதாக கூறினார். இந்த விசாரணையில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது என்றும், முழு வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.


பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும் என்றும், சட்டத்தை மீறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


மேலும், அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவ சேவையை உறுதி செய்வது அரசின் முக்கிய நோக்கமாகும் என்றும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களுக்கான உரிமம் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Previous Next

نموذج الاتصال