சென்னை:
இந்திய அஞ்சல் துறையின் (India Post) பெயரை பயன்படுத்தி புதிய வகை சைபர் மோசடி நடைபெற்று வருவதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி (SMS) அல்லது வாட்ஸ்அப் மூலம், “உங்கள் பார்சலை தவறான முகவரி காரணமாக வழங்க முடியவில்லை. மீண்டும் டெலிவரி செய்ய சிறிய தொகையை ஆன்லைனில் செலுத்துங்கள்” என்ற வாசகத்துடன் ஒரு இணைப்பை (Link) அனுப்புகின்றனர்.
அந்த இணைப்பை திறந்தால், இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்ற தோற்றமுடைய போலி இணையதளத்துக்கு பயனர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தகவல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பதிவிடும்படி கேட்கப்படுகிறது. இந்த தகவல்களைப் பெற்றுக் கொண்டு, மோசடி கும்பல்கள் வங்கி கணக்கிலுள்ள பணத்தை திருடும் அபாயம் இருப்பதாக சிபிஐ எச்சரித்துள்ளது.
எனவே, அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் SMS அல்லது வாட்ஸ்அப் இணைப்புகளை ஒருபோதும் திறக்க வேண்டாம் என்றும், பார்சல் தொடர்பான தகவல்களை இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் பின், ஓடிபி (OTP) மற்றும் கடவுச்சொல் போன்ற ரகசிய தகவல்களை யாரிடமும் பகிரக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய குறுஞ்செய்திகள் அல்லது மோசடி முயற்சிகள் தொடர்பாக உடனடியாக தேசிய சைபர் குற்ற உதவி எண் 1930 அல்லது தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளம் மூலம் புகார் அளிக்குமாறு பொதுமக்களை சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது.