சென்னை: தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அடுத்த ஒரு ஆண்டில் திமுக மற்றும் அதிமுக தனித்தனியாக கட்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு, பாஜகவுடன் இணையும் சூழல் உருவாகலாம்" என்று தெரிவித்தார்.
மேலும், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து தங்களது பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும், தவெக அரசை செயலிழக்கச் செய்ய அரசியல் குறுக்கு வழிகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பழநி கோயில் நில மோசடி வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், இந்த விவகாரத்தில் அரசு யாருக்கும் துணை நிற்காது என்றும் அவர் கூறினார்.
பத்திரப்பதிவு துறையில் கடந்த காலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இனி பத்திரப்பதிவு துறையில் ஊழல் அல்லது முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாகர்கோயில் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், எந்த அரசு துறையிலும் லஞ்சம் கேட்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.