9-ம் வகுப்பில் 3-வது மொழி வேண்டாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

 

புதுடெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.


தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜவஹர் நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை நடைமுறையில் இருப்பதே தமிழக அரசின் எதிர்ப்புக்குக் காரணம் என்று தெரிவித்தார்.


இதற்கு பதிலளித்த நீதிபதி பி.வி. நாகரத்னா, மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் மேலும் ஒரு மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்பதே நடைமுறை என்றும், அதில் இந்தி கட்டாயம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


மேலும், 9-ம் வகுப்பில் புதிய மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட நீதிபதி, மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்த வேண்டுமெனில் 6-ம் வகுப்பிலேயே தொடங்குவது பொருத்தமானது என்றார்.


அதே நேரத்தில், மாநில அரசுகளுக்கு தனித்துவமான கல்விக் கொள்கை இருக்கலாம் என்றாலும், மத்திய அரசின் கல்வித் திட்டங்களை மாநிலங்கள் தடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.


இந்த வழக்கில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கான இடத் தேர்வு தொடர்பாக தகுந்த அறிவுறுத்தல்களைப் பெற தமிழக அரசு மேலும் ஆறு வார கால அவகாசம் கோரியுள்ளது.

Previous Next

نموذج الاتصال