புதுடெல்லி: பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஆல்கஹால் கலந்த இருமல் சிரப், டானிக் உள்ளிட்ட சில மருந்துகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இனி குறிப்பிட்ட அளவை மீறும் ஆல்கஹால் கலந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல் வாங்க முடியாது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 12 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கலந்தும், 30 மில்லி லிட்டருக்கும் அதிகமான அளவில் விற்கப்படும் மருந்துகள் அனைத்தும் ‘அட்டவணை H1’ (Schedule H1) பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனால், இவ்வகை மருந்துகளை மருந்தகங்கள் மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்ய அனுமதி இல்லை. குறிப்பாக, அதிக ஆல்கஹால் கொண்ட இருமல் மருந்துகள், டானிக்குகள் மற்றும் சில வாய்வழி திரவ மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாற்றத்தின் மூலம் மருந்துகளின் தவறான பயன்பாட்டை குறைத்தல், பொறுப்பான விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் மருந்து கண்காணிப்பை வலுப்படுத்துதல் ஆகியவை நோக்கமாக இருப்பதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த மருந்துகள் பாதுகாப்பற்றவை அல்லது தடை செய்யப்பட்டவை என்று பொதுமக்கள் கருத வேண்டாம் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தேவையான மருத்துவ ஆலோசனையுடன் பயன்படுத்தினால் இம்மருந்துகள் பாதுகாப்பானவையே என கூறப்பட்டுள்ளது.
மருந்துகள் (5-வது திருத்த) விதிகள், 2026-ன் கீழ் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரை பொதுவாக பயன்படுத்தப்பட்ட ‘Syrups’ (சிரப்ஸ்) என்ற வகைப்பாட்டில் இருந்த சில திரவ மருந்துகள் தற்போது கடுமையான மருந்து ஒழுங்குமுறை பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த மாற்றம், மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (DTAB) பரிந்துரைகளின் அடிப்படையில், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-ன் விதிகளின்படி அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.