அமர்நாத் குகை பனிலிங்கம் 90% உருகியது! – பருவநிலை மாற்றத்தின் தீவிர பாதிப்பு?

 


ஜம்மு: உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மேலும் தீவிரமடைந்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில், அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமயமலையில் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயில், இந்து பக்தர்களின் மிகப் புனிதமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க வருகை தருகின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 அன்று தொடங்கியது.

மே 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட பாதுகாப்புப் படை (BSF) புகைப்படங்களில் சுமார் 7 அடி உயரத்தில் இருந்த பனிலிங்கம், யாத்திரை தொடங்கியபோது 5 அடி உயரமாக காணப்பட்டது. தற்போது, ஒரு வாரத்திலேயே அது சுமார் 90% வரை உருகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்துப்படி, 2004, 2006, 2007, 2016 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளிலும் பனிலிங்கம் உருகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இந்த ஆண்டு உருகும் வேகம் இதற்கு முன் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

குகை பகுதியில் வெப்பநிலை உயர்வு, பனியை உருவாக்கும் நீர்த்துளிகளின் அளவு குறைதல், யாத்திரை காலத்தில் அதிகமான பக்தர்கள் வருகையால் குகைக்குள் வெப்பம் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்கள் பனிலிங்கம் வேகமாக உருகுவதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்ஜிதா முப்தி, "மரங்கள் வெட்டுதல், சட்டவிரோத சுரங்கப் பணிகள், மலைப்பகுதிகளில் குப்பைகள் கொட்டுதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை இயற்கைச் சூழலை கடுமையாக பாதிக்கின்றன. மலைகள், நதிகள் மற்றும் பனிச்சிகரங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு" என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மதத் தலங்களையும், இயற்கை அதிசயங்களையும் நேரடியாக பாதிக்கத் தொடங்கியுள்ளதற்கான முக்கிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

Previous Next

نموذج الاتصال