பெங்களூரு: கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் திலீப் குமார், 48-வது கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பிரகாஷ் ராஜ் நான்கு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் மூன்று முறை சம்மன் அனுப்பியதாகவும், அவர் நேரில் ஆஜராகாததால் கடந்த ஜூன் மாதம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையில் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜரானார்.
அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நீதிமன்றம் அனுப்பிய சம்மன் பிரகாஷ் ராஜுக்கு முறையாக வழங்கப்படவில்லை. ஊடகங்கள் மூலமாகவே இந்த வழக்கு குறித்த தகவல் அவருக்கு தெரியவந்தது. எனவே, பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை ரத்து செய்து ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ரூ.4,000 உத்தரவாதத் தொகையுடன் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற உள்ளது.