ஊத்தங்கரை எம்எல்ஏ குதிரை பேரம் வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

 

சென்னை: ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ. பாலசுப்பிரமணி தாக்கல் செய்த மனுவில், திருவல்லிக்கேணி போலீஸார் விசாரித்து வரும் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீது அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.


பின்னர், கூடுதல் முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், திட்டமிட்டபடி தீர்ப்பை வழங்கினர்.


தீர்ப்பில், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் சிபிஐ விசாரணை கோரப்பட்டுள்ளது என நீதிமன்றம் குறிப்பிட்டது.


மேலும், இந்த வழக்கில் மாநில போலீஸார் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு 9 பேரை கைது செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.


பொதுநல வழக்குகள் உண்மையான பொதுநலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமே அன்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்படக் கூடாது என்றும் குறிப்பிட்ட நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Previous Next

نموذج الاتصال