பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி (Palani, Dindigul) மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில், நிலத்தை விற்றதாகக் கூறப்படும் முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் சேதுபதி மற்றும் வெள்ளைத்துரை ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்கள் தங்களது செல்போன்களை அணைத்து வைத்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நில விற்பனை மற்றும் பதிவு தொடர்புடையோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சர்ச்சைக்குரிய நிலப் பதிவு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ரத்து செய்யப்பட்டது. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான குழு, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் தேவஸ்தானம் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பதிவுத்துறை அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகள், ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வழக்கில் தொடர்புடைய மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் மற்றும் சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. நிலப் பதிவு நடைபெற்ற நாளில் சாட்சியாக கையெழுத்திட்டவர்களும் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நில மோசடியில் மேலும் சில அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடி விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது. இதற்காக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வில்லங்கச் சான்றுகள் மற்றும் சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்து மூன்று தனிப்படைகள் மூலம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
TN Press TV
🌐 https://www.tnpress.in/
🌐 www.tamilnews.in
🌐 www.bhayamariyaan.com
📱 X | Facebook | ShareChat | Dailyhunt : @Tnpresstv