பொது இடங்களில் கால்நடைகளை வெட்டத் தடை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

 

சென்னை / புதுடெல்லி

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பொது இடங்களில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளர் கே. சூர்ய பிரசாந்த் தாக்கல் செய்த மனுவில், பக்ரீத் உள்ளிட்ட நாட்களில் அனுமதியற்ற பொது இடங்களில் கால்நடைகள் வெட்டப்படுவதாகக் கூறி, அதற்கு தடை விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பக்ரீத் பண்டிகை மட்டுமின்றி மற்ற நாட்களிலும், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பொது இடங்களில் மாடுகள் உள்ளிட்ட எந்தவொரு கால்நடைகளையும் இறைச்சிக்காக வெட்டக்கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, மனுதாரர் கோரிய வரம்பை மீறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், வழக்கில் எழுப்பப்படாத மதச் சடங்கு தொடர்பான கருத்துகளையும் பதிவு செய்துள்ளதாகவும் வாதிட்டார்.

மேலும், 1976-ஆம் ஆண்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பசுவதைத் தடை தொடர்பான அரசாணையை தற்போதைய சூழலுடன் நேரடியாக இணைத்து பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், எதிர்மனுதாரர் கே. சூர்ய பிரசாந்துக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

Previous Next

نموذج الاتصال