சாந்திபூர், நாடியா மாவட்டம், மேற்கு வங்கம்
செல்போன் தொலைந்ததைத் தொடர்ந்து, தேசிய விருது பெற்ற இயற்கை விவசாயி ஒருவர் சைபர் மோசடியில் ரூ.83,244 இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஷைலன் சாண்டி, இயற்கை வேளாண்மையை ஊக்குவித்ததற்காக 2019-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றவர். இவரது செல்போன் கடந்த மார்ச் 29 அன்று தொலைந்தது. உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், புதிய சிம் கார்டுக்கும் விண்ணப்பித்தார்.
புதிய சிம் கார்டைப் பெற்ற பிறகு, மார்ச் 31 அன்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.10,000 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஏப்ரல் 1 அன்று சாந்திபூர் காவல் நிலையம் மற்றும் சைபர் குற்றப்பிரிவில் தனித்தனியாக புகார் அளித்தார்.
ஆனால் மோசடி அத்துடன் நிற்கவில்லை. ஏப்ரல் 2 அன்று மற்றொரு பொதுத்துறை வங்கியில் உள்ள அவரது கணக்கில் இருந்து 12 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.73,244 எடுக்கப்பட்டதாக மீண்டும் தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரண்டு வங்கிகளின் மேலாளர்கள், நோடல் அதிகாரிகள், சைபர் குற்றப்பிரிவு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மை அலுவலகத்திற்கும் அவர் புகார் அனுப்பினார்.
அதிர்ச்சியளிக்கும் வகையில், அவரது இரண்டு வங்கிக் கணக்குகளிலும் ஆன்லைன் வங்கி சேவை செயல்பாட்டில் இல்லை. மேலும், அவரிடம் ஏடிஎம் கார்டும் இல்லை. ஆன்லைன் வங்கி வசதியோ அல்லது ஏடிஎம் கார்டோ இல்லாத நிலையில், இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்டது என்பது குறித்து வங்கி அதிகாரிகளுக்கே தெளிவான விளக்கம் அளிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பிய போதிலும், மூன்றரை மாதங்களுக்கும் மேலாகியும் இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என ஷைலன் சாண்டி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.