மதுரை உட்பட 12 மாவட்ட அரசு பள்ளிகள்: கட்டிட ஆய்வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 

மதுரை: மதுரை உட்பட தென் மண்டலத்தின் 12 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் வல்லாதிரக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி விருதுநகர், திருச்சி, நெல்லை, திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல அரசு பள்ளிகளில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், வகுப்பறைகள், சமையலறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு, 12 மாவட்ட தலைமை கல்வி அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.


மேலும், பள்ளிகளில் சுகாதாரம், தூய்மை, குடிநீர், வடிகால் வசதி, சுற்றுப்புற பாதுகாப்பு, புதர்கள் மற்றும் களைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து அறிக்கைகள் பெற்று, ஒருங்கிணைந்த அறிக்கையை ஆகஸ்ட் 24-க்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


அவசரமாக சரிசெய்ய வேண்டிய குறைபாடுகள் இருந்தால், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.


அத்துடன், அரசு பள்ளிகளை தூய்மையாக பராமரிக்க தற்காலிக தூய்மை பணியாளர்களை நியமிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال