தமிழகம் முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்கும் திட்டத்தை, சென்னை பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தனது பெரம்பூர் தொகுதிக்கு முதன்முறையாக சென்ற முதல்வர் விஜய், புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் மற்றும் புதிய இ-சேவை மையத்தை திறந்து வைத்தார்.
பின்னர், எம்.கே.பி. நகர் சிந்தாமணி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் புதிய மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு புதிய ரேஷன் அட்டைகளையும், அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் வழங்கினார்.
இ-சேவை மையத்தில் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக விண்ணப்பித்திருந்த பொதுமக்களுடன் முதல்வர் கலந்துரையாடி, ஐந்து பேருக்கு உடனடியாக சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் பெரம்பூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான பரிந்துரை கடிதத்தையும் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, வியாசர்பாடியில் ரூ.47.50 கோடி மதிப்பில் செயல்பட்டு வரும் மாநகர் போக்குவரத்துக் கழக மின்சார பேருந்து பணிமனையை பார்வையிட்டு, பேருந்துகளுக்கான சார்ஜிங் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி, எதிர்காலத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தாழ்தள மின்சார பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 73,000 புதிய மின்னணு ரேஷன் அட்டைகள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் – முக்கிய விவரங்கள்
- மொத்த குடும்ப அட்டைகள்: 2,28,53,037
- பயனாளிகள்: 7.01 கோடிக்கும் மேற்பட்டோர்
- நியாயவிலைக் கடைகள்: 34,908
- தாலுகாக்கள்: 318
- அந்த்யோதயா அன்னயோஜனா (AAY) அட்டைகள்: 18.62 லட்சம்
- AAY பயனாளிகள்: 61.76 லட்சம்
- முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH): 99.44 லட்சம்
- PHH பயனாளிகள்: 3.02 கோடி