சிறுநீரகம் வழங்குங்கள் அல்லது கருணைக் கொலைக்கு அனுமதியுங்கள்: குடியரசுத் தலைவருக்கு 5 தாய்மார்களின் உருக்கமான கோரிக்கை


 கோட்டா:


ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு ஆளான 5 பெண்கள், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு உருக்கமான கடிதம் எழுதி அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அது சாத்தியமில்லையெனில் கருணைக் கொலைக்கு (Euthanasia) அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.


கடந்த மே 5 முதல் 7 வரை கோட்டா புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற இந்த 5 பெண்களும், அதன்பிறகு ஏற்பட்ட கடுமையான சிறுநீரக பாதிப்பு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மருத்துவமனையில் மருத்துவ அலட்சியம் நடந்ததாகவும், போலி மருந்துகள் வழங்கப்பட்டதாலேயே தங்களது சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக தற்போது 48 மணி நேரத்திற்கு ஒருமுறை டயாலிசிஸ் சிகிச்சையை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இவை எதுவும் சாத்தியமில்லையெனில், மனித மரியாதையுடன் வாழ முடியாத சூழ்நிலையில் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான ராகினி மீனா, மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினர் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் பலமுறை முறையிட்டும் போதுமான மருத்துவ, நிதி உதவி அல்லது நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து டயாலிசிஸ், நுரையீரலில் நீர் தேக்கம், சுவாசக் கோளாறு மற்றும் ஆக்சிஜன் உதவி ஆகியவற்றால் தங்களது வாழ்க்கை மிகுந்த வேதனையாக மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதற்கிடையில், ராஜஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களில் பிரசவம் தொடர்பான சிக்கல்களால் குறைந்தது 19 பெண்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கோட்டா மருத்துவமனையில் மட்டும் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் பில்வாரா, பன்ஸ்வாரா மற்றும் பிகானேர் மாவட்டங்களிலும் தாய்மார் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், மாநிலத்தின் சுகாதார அமைப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.


இந்த சம்பவங்கள் அனைத்தும் விசாரணையில் உள்ளதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பிரசவத்துக்குப் பிந்தைய உடல்நலச் சிக்கல்கள், அதிக ரத்தப்போக்கு, உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் ரத்த உறைவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ காரணங்களே உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று மாநில சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

Previous Next

نموذج الاتصال