35 ஆண்டுகளுக்கு முன்பு நண்பரிடம் வாங்கிய ரூ.1,000 மதிப்பிலான கடனை, ரூ.25,000 ஆக திருப்பிச் செலுத்தி கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நேர்மைக்கும் நட்பிற்கும் புதிய எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் மற்றும் தெலங்கானா மாநிலம் ஜகித்யால் மாவட்டம் தர்மபுரியைச் சேர்ந்த லச்சன்னா ஆகியோர், 1991-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் பணியாற்றியபோது நண்பர்களாக அறிமுகமானவர்கள்.
அந்த காலத்தில், லச்சன்னாவிடம் இருந்து இஸ்மாயில் 120 சவுதி ரியால் (அப்போது சுமார் ரூ.1,000) கடனாக பெற்றிருந்தார். சில நாட்களிலேயே லச்சன்னா இந்தியா திரும்பியதால், அப்போது செல்போன் மற்றும் சமூக வலைத்தள வசதிகள் இல்லாத காரணத்தால் இருவருக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பல ஆண்டுகள் கடந்தபோதும், வாங்கிய கடனை மறக்காத இஸ்மாயில், தனது நண்பரைத் தேடி கண்டுபிடிக்க முடிவு செய்தார். லச்சன்னாவின் தொலைபேசி எண் அல்லது முகவரி எதுவும் இல்லாத நிலையில், அவரது ஊரின் பெயரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தெலங்கானாவுக்கு பயணம் செய்தார்.
உள்ளூர் மக்களின் உதவியுடன் லச்சன்னாவின் குடும்பத்தினரை சந்தித்த இஸ்மாயில், ரூ.25,000 பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது லச்சன்னா வளைகுடா நாட்டில் பணியாற்றி வந்ததால், இருவரும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பின் மூலம் உருக்கமாக பேசிக் கொண்டனர்.
35 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த சிறிய கடனை மறக்காமல், பல மடங்கு அதிகமாக திருப்பிச் செலுத்திய இஸ்மாயிலின் செயல் தனக்கு பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்ததாக லச்சன்னா தெரிவித்தார்.
மேலும், "இஸ்மாயில் நேர்மையும் நன்றியுணர்வும் நிறைந்த மனிதர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தனது வாக்குறுதியை காப்பாற்றியது எங்கள் நட்பின் வலிமையை வெளிப்படுத்துகிறது" என்று அவர் பாராட்டினார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி, நேர்மை, நன்றியுணர்வு மற்றும் உண்மையான நட்பின் சிறந்த எடுத்துக்காட்டாக பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.