சென்னை (Chennai):
சென்னை சென்ட்ரல் அருகே இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வந்த 21 வயது இளைஞர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை, அய்யா பிள்ளை தெருவைச் சேர்ந்த வசந்தகுமார் (21), பீச் ரயில் நிலையம் அருகே செயல்படும் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதேசமயம் பகுதி நேரமாக ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநராகவும் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு திருவல்லிக்கேணியில் வசிக்கும் தனது பெண் தோழியை சந்தித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, சென்னை சென்ட்ரல் அருகே ஈ.வெ.ரா. சாலையில் இருந்து வால்டாக்ஸ் சாலை நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதியதாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த எதிர்தரப்பைச் சேர்ந்த இருவர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தகுமாரின் கழுத்தில் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த வசந்தகுமார் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்த நிலையில், தாக்குதல் நடத்திய இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் பூக்கடை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் தடயங்களை சேகரித்ததுடன், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பூக்கடை போலீசார், தனிப்படை அமைத்து தப்பியோடிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை சென்ட்ரல் பகுதியில் நடந்த இந்த கொலைச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
