திருச்சி | ஜூலை 7, 2026
திருச்சியில் சட்டவிரோத ஹவாலா பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.14.40 லட்சம் ரொக்கம், 150-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள், 50 செல்போன்கள் மற்றும் பல சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் சர்வதேச ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், அமலாக்கத் துறை (ED) விசாரணைக்கு தயாராகியுள்ளது. மேலும், தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளும் இந்த வழக்கை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் கே.கே.நகர் போலீசார் நடத்திய சோதனையில் மேற்கண்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டில் தங்கியிருந்த தமீம் அன்சாரி (ராமநாதபுரம்), அஜ்மீர் அலி (உத்திரகோசமங்கை), பழனிமுருகன், பிரவீன், முத்தமிழ்ச்செல்வன் மற்றும் ராஜ்குமார் (கோடிக்குளம்) ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில், இந்திய ரூபாயை அமெரிக்க டாலராகவும், அமெரிக்க டாலரை இந்திய ரூபாயாகவும் சட்டவிரோதமாக மாற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ரூ.1 லட்சம் பரிவர்த்தனைக்கும் ரூ.6,000 வரை கமிஷன் பெற்றதாகவும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அறிமுகமான பொதுமக்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கி, அவர்களது ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் திருச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சர்வதேச ஹவாலா வலையமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர். மேலும், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பங்கு வர்த்தகம் தொடர்பான கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதுவரை அத்தகைய தொடர்பு உறுதி செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்:
🌐 https://www.tnpress.in/
🌐 www.tamilnews.in
🌐 www.bhayamariyaan.com
எங்களைப் பின்தொடருங்கள்: @Tnpresstv
