திருவள்ளூர் | ஜூலை 7, 2026
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில், மீதமுள்ள அமோனியா வாயுவை முழுமையாக அகற்றும் பணி இன்று (ஜூலை 7) நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 51 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 14 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிறுவனத்தின் சேமிப்பு தொட்டிகளில் இருந்த சுமார் 2 டன் அமோனியா வாயுவை அகற்றும் பணி கடந்த ஜூலை 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்கள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்தப் பணியில், தொட்டிகளில் இருந்த அமோனியா வாயு டேங்கர் லாரியில் நிரப்பப்பட்டு, சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (MFL) நிறுவனத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குளிரூட்டும் அறைகள், பதப்படுத்தும் கிடங்குகள் மற்றும் குழாய்களில் தேங்கியுள்ள அமோனியா வாயுவை சல்பியூரிக் அமிலம் (Sulphuric Acid) மூலம் செயலிழக்கச் செய்து முழுமையாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பணிகள் முழுமையாக நிறைவடையாததால், இன்று நான்காவது நாளாகவும் அவை தொடர்கின்றன.
அமோனியா அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை (NH-716) பகுதியில் ஒரு வழிப்பாதை முறையில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளன.
இன்றைய பணிகளின் போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உள்ளிட்ட அமைப்புகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
— TN PRESS NEWS
🌐 https://www.tnpress.in/
🌐 www.tamilnews.in
🌐 www.bhayamariyaan.com
📱 X | Facebook | ShareChat | Dailyhunt : @Tnpresstv
