பாவ்நகர் | ஜூலை 7, 2026
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில், சிங்கத்தின் தாக்குதலில் சிக்கிய விவசாயி ஒருவர், சுமார் 30 நிமிடங்கள் உயிருக்கு போராடிய நிலையில் கிராம மக்களின் துரித நடவடிக்கையால் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாவ்நகர் மாவட்டம் கராஜியா கிராமத்துக்குள் நேற்று நுழைந்த ஆசியச் சிங்கம், ஒரு மாட்டுத் தொழுவம் அருகே பதுங்கியிருந்தது. இதை அறியாமல், தனது பசுக்களுக்கு தீவனம் வைக்கச் சென்ற விவசாயி பார்மர் மீது திடீரென சிங்கம் பாய்ந்தது.
சிங்கம் அவரது கால்களை அழுத்திப் பிடித்து அசைய முடியாதபடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உதவி கேட்டு அலறியதை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சிங்கத்தை விரட்டும் நோக்கில், பாதுகாப்பான தூரத்தில் இருந்து கிராம மக்கள் கூச்சலிட்டதுடன், கற்களையும் வீசி விரட்ட முயன்றனர். அப்போது விவசாயியின் கை சிங்கத்தின் வாயிலும், கால்கள் அதன் பிடியிலும் இருந்ததால் யாரும் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சுமார் அரை மணி நேரம் சிங்கம் விவசாயியை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. பின்னர் சம்பவ இடத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சிங்கம் அவரை விட்டுவிட்டு அருகில் இருந்த பசுவை நோக்கி நகர்ந்தது. இதையடுத்து கிராம மக்கள் உடனடியாக விவசாயியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சிங்கம் விவசாயியை கடுமையாகக் கடிக்காமல் தனது பிடியில் மட்டுமே வைத்திருந்ததால், அவர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருவதுடன், கிராமப் பகுதிக்குள் நுழைந்த சிங்கத்தை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்:
🌐 https://www.tnpress.in/
🌐 www.tamilnews.in
🌐 www.bhayamariyaan.com
எங்களைப் பின்தொடருங்கள்: @Tnpresstv
