பெங்களூரு | ஜூலை 7, 2026
கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்தின் முகப்பு விளக்குகள் திடீரென செயலிழந்த நிலையில், நடத்துநர் செல்போன் டார்ச் வெளிச்சம் காட்டியபடி, ஓட்டுநர் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்த் ராயப்பா (43), அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு, கலபுரகியில் இருந்து சுமார் 84 கி.மீ. தொலைவில் உள்ள சின்சோலி நோக்கி அரசு பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார்.
இலக்கை அடைய இன்னும் 6 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருந்தபோது, பேருந்தின் இரு முகப்பு விளக்குகளும் திடீரென செயலிழந்தன. இதனால் பேருந்தை நிறுத்தாமல், நடத்துநர் மஞ்சுநாத் செல்போனின் டார்ச் லைட்டை ஒளிரவைத்து முன்புறம் வெளிச்சம் காட்டினார். அந்த குறைந்த வெளிச்சத்திலேயே, குண்டும் குழியுமான சாலையில் ஓட்டுநர் பேருந்தை கவனமாக இயக்கி பயணிகளை பாதுகாப்பாக இலக்கை அடையச் செய்தார்.
இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், கர்நாடகாவில் அரசு போக்குவரத்து சேவையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா விமர்சனம் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், "மாநில அரசின் போக்குவரத்து நிர்வாகக் குறைபாடுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. போதுமான வசதிகளும், பராமரிப்பும் இல்லாததால் மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து அரசு பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும்" என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் செய்திகள்:
🌐 https://www.tnpress.in/
🌐 www.tamilnews.in
🌐 www.bhayamariyaan.com
எங்களைப் பின்தொடருங்கள்: @Tnpresstv
