ட்ரம்ப் அறிவிப்பால் உலக சந்தையில் அதிர்வு: கச்சா எண்ணெய் விலை 6% உயர்வு

 அங்காரா (Ankara, Türkiye):

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 74.5 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளது.

துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “என்னைப் பொறுத்தவரை ஈரானுடனான தற்காலிக ஒப்பந்தம் முடிந்துவிட்டது. ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, பின்னர் பொதுவெளியில் மறுக்கிறார்கள். அவர்களுடன் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று நான் நம்பவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தையை தொடர்வது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும், ஈரான் தலைமையை கடுமையாக விமர்சித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (LNG) கப்பல் மற்றும் சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல் உள்ளிட்ட மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலடியாக, அமெரிக்கா ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் தளங்கள் மற்றும் புரட்சிகர காவலர் படையின் கப்பல்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள 85 அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த புதிய மோதலால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் என்ற கவலையும் சந்தைகளில் உருவாகியுள்ளது.

இதன் தாக்கமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் சுமார் 1.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சத்தால் அமெரிக்க டாலரும் வலுவடைந்துள்ளது.

இதற்கிடையில், மசூத் பெஷஷ்கியான் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், “விதிகளை வளைப்பது, போட்டியாளர்களை அச்சுறுத்துவது, தடைகளை உருவாக்குவது போன்ற செயல்களில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடுகிறது. இத்தகைய அணுகுமுறையை ஈரான் நிராகரிக்கிறது. எங்களது உரிமைகளை பாதுகாக்க உறுதியாக நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال