சென்னை (Chennai):
குதிரை பேரம் தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் ரூ.35 கோடி வழங்குவதாக சிலர் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இருவரும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், முன்ஜாமீன் கோரி தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன. காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
பின்னர் நடைபெற்ற விரிவான விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி, இருவரும் தினமும் காலை மற்றும் மாலை விசாரணை அதிகாரி முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.