சென்னை (Chennai):
அரசுப் பள்ளி மாணவியிடம் அமைச்சர் கீர்த்தனா நடந்து கொண்ட விதம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கத்திற்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:
“அமைச்சருக்கு ஆதரவாக பேசுவதற்கு முன்பு, அரசுப் பள்ளிகளின் நிலையை கவனியுங்கள்” என்று அமைச்சர் ராஜ்மோகன்-க்கு நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசுப் பள்ளிகளில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கையேடுகள் பல இடங்களில் இன்னும் வழங்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகன், முதலில் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் உள்ளனரா, பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளனவா, வகுப்பறைகள், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக, அரசுப் பள்ளி மாணவியிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வை நியாயப்படுத்தும் வகையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியிருப்பது ஏற்க முடியாதது என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மேலும், “தமிழகத்தின் கல்வித் துறை மிக முக்கியமான பொறுப்பு. அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் உங்கள் செயல்பாடுகளைப் பொறுத்தே அமைகிறது. எனவே, உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு, அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.