திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் டூஃபான்’ நடவடிக்கையில் 6,700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6,000-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நடவடிக்கை ஒரு மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“கேரள காவல்துறையின் ‘ஆபரேஷன் டூஃபான்’ போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இதுவரை 6,700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6,000-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.30 முதல் ரூ.40 கோடி மதிப்பிலான தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.”
போதைப்பொருள் சமூகத்தையும், குறிப்பாக இளைஞர்களையும் கடுமையாக பாதித்து வருவதால், அதற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தென்னிந்திய மாநிலங்களின் முக்கிய முடிவுகள்:
மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க நிரந்தர ஒருங்கிணைப்பு அமைப்பு உருவாக்க முடிவு.
அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் காவல் கண்காணிப்பாளர் (SP) அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகளை ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்க தீர்மானம்.
நிகழ்நேர உளவுத்தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஒப்புதல்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (NCB), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) உள்ளிட்ட மத்திய அமைப்புகளும் இந்த ஒருங்கிணைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தென்னிந்திய மாநிலங்களின் ஒருங்கிணைந்த இந்த நடவடிக்கை, மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை கட்டுப்படுத்த முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.