“கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்ப வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்” – வானதி சீனிவாசன்

 

சென்னை: கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கியுள்ளது.

1998 பிப்ரவரி 14-ஆம் தேதி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கோவை வந்திருந்தபோது, அவரை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 58 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் யாரும் எந்தத் தவறும் செய்யாத பொதுமக்கள். குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த பலர் அந்தச் சம்பவத்தில் பலியானார்கள். உளவுத்துறை மற்றும் காவல்துறையின் முன்னெச்சரிக்கை தவறுகளால் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அந்த குடும்பங்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கருணை மற்றும் நிவாரண நடவடிக்கைகள், இதுபோன்ற பிற பெரிய துயரச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.

எனவே, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதைப் போலவே, கோவை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்க வேண்டும்” என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Previous Next

نموذج الاتصال