சென்னை | ஜூலை 7, 2026
சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 64,586 செல்லப்பிராணிகளுக்கு (நாய், பூனை) அதிகாரப்பூர்வ உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் கட்டாயமாக்கப்பட்டதன் மூலம் செல்லப்பிராணிகளின் ஒருங்கிணைந்த மேலாண்மை வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் விவரங்களை பதிவு செய்தல், மைக்ரோசிப் பொருத்துதல், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அடுத்தகட்ட தடுப்பூசி தேதிகளை கண்காணிக்கும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.
செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கும், உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிப்பதை கண்காணிப்பதற்கும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதைத் தடுப்பதற்கும் மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசிப்பில் செல்லப்பிராணியின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும். இதுவரை இணையதளத்தில் 1,26,781 செல்லப்பிராணிகளின் விவரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 1,15,119 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 74,740 செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளதுடன், 64,586 செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு, அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்ததையடுத்து உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்பதால், இன்னும் பதிவு செய்யாத செல்லப்பிராணி உரிமையாளர்கள் உடனடியாக பதிவு செய்து உரிமம் பெறுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், மைக்ரோசிப் பொருத்துதல், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை சென்னை மாநகராட்சியின் திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் செயல்படும் செல்லப்பிராணி மருத்துவமனைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
— TN PRESS NEWS
🌐 https://www.tnpress.in/
🌐 www.tamilnews.in
🌐 www.bhayamariyaan.com
📱 X | Facebook | ShareChat | Dailyhunt : @Tnpresstv
