மாமல்லபுரம் | ஜூலை 7, 2026
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரிவாக்கப் பணிகளை விரைந்து நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நெம்மேலியில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் தினமும் 110 எம்.எல்.டி. மற்றும் 150 எம்.எல்.டி. திறன் கொண்ட இரண்டு கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தென் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 20 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், பேரூரில் ரூ.5,814 கோடி மதிப்பில் தினமும் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட புதிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் 70 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், புதிய ஆலை கட்டுமானப் பணிகளையும், ஏற்கனவே செயல்பட்டு வரும் நெம்மேலி ஆலைகளையும் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் உற்பத்தித் திறன், கட்டுமான முன்னேற்றம் மற்றும் பேரூரிலிருந்து போரூர் வரை 59 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர், அனைத்து பணிகளையும் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வரவும், தற்போதுள்ள ஆலைகளை சிறப்பாக பராமரித்து தடையின்றி குடிநீர் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
புதிய பேரூர் ஆலை செயல்பாட்டுக்கு வந்தவுடன் சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள 20 உள்ளாட்சி பகுதிகளில் வசிக்கும் சுமார் 22.67 லட்சம் மக்கள் கூடுதலாக பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் த. சரத்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதற்கிடையில், ஆலை முகப்பில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருந்த கல்வெட்டு அகற்றப்பட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்த துறை அதிகாரிகள், பராமரிப்புப் பணிகளுக்காக மட்டுமே கல்வெட்டு தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாகவும், பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்றும் தெரிவித்தனர்.
— TN PRESS NEWS
🌐 https://www.tnpress.in/
🌐 www.tamilnews.in
🌐 www.bhayamariyaan.com
📱 X | Facebook | ShareChat | Dailyhunt : @Tnpresstv
