சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, போட்டோஷூட் என்ற பெயரில் சின்னத்திரை நடிகையை ஆபாசமாக புகைப்படம் எடுக்க முயன்றதாக, சினிமா தயாரிப்பாளர் ஒருவரும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸார் கூறுகையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சின்னத்திரை நடிகை (அடையாளம் பாதுகாக்கும் வகையில் பெயர் வெளியிடப்படவில்லை), சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி தொடர்புகொண்ட தயாரிப்பாளர் ஒருவரின் அழைப்பின் பேரில், சாலிகிராமத்தில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்தவர்கள் முதலில் சில சாதாரண புகைப்படங்களை எடுத்த பிறகு, கதாபாத்திரத்திற்காக உடலில் தழும்புகள் இருக்கக் கூடாது என்று கூறி, ஆடைகளை அகற்றி புகைப்படம் எடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை, அங்கிருந்து வெளியேற முயன்றபோது, தயாரிப்பாளர் மற்றும் இரண்டு பெண்கள் தடுத்ததாகவும், பின்னர் தப்பித்து வெளியே வந்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், பெருங்குடியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் (65), தரமணியைச் சேர்ந்த இந்திராணி (40), விருதுநகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கார்த்திகா (35) ஆகியோரை கைது செய்தனர்.
மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், சம்பவத்தின் போது அவர்களுடன் இருந்த 7 வயது சிறுமி, பாதுகாப்பு நடவடிக்கையாக அடையாறில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.