நகைக்காக 55 வயது பெண்ணை கிணற்றில் தள்ளிய கொடூரம்: 24 மணி நேரம் உயிர் போராட்டம்... இளைஞர் கைது


 கரீம்நகர் (தெலங்கானா): கூலி வேலை தருவதாக ஆசை காட்டி 55 வயது பெண்ணை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று, அவரது நகைகள் மற்றும் செல்போனை பறித்துவிட்டு விவசாயக் கிணற்றில் தள்ளிய சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இளைஞரை கரீம்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் கூறுகையில், கரீம்நகர் மாவட்டம் கிசான் நகரைச் சேர்ந்த கங்காதர லட்சுமி (55), கடந்த ஜூலை 1-ஆம் தேதி வேலை தேடி தினக்கூலி தொழிலாளர்கள் கூடும் இடத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, விவசாய வேலை இருப்பதாகக் கூறிய இளைஞர் ஒருவர், அவரை இருசக்கர வாகனத்தில் திம்மாபூர் அருகே உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்றதும், அந்த இளைஞர் லட்சுமியின் செல்போன் மற்றும் தங்க நகைகளை பறித்துள்ளார். அவர் சத்தம் போட்டு உதவி கேட்க முயன்றபோது, அவரது வாயில் துணியை திணித்து அருகிலிருந்த விவசாயக் கிணற்றில் தள்ளிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

24 மணி நேரம் உயிர் காக்க போராடிய பெண்

கிணற்றுக்குள் விழுந்த லட்சுமி, தண்ணீரில் மூழ்காமல் இருக்க கிணற்றின் சுவரைப் பற்றிக்கொண்டு இரவும் பகலும் கிட்டத்தட்ட 24 மணி நேரம் உயிர் காக்க போராடியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள் அவரது குரலைக் கேட்டு, மீட்புப் பணியில் ஈடுபட்டு பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

ஆன்லைன் சூதாட்டக் கடனுக்காக செய்த கொடூரம்

விசாரணையில், கைது செய்யப்பட்ட இளைஞர் பட்டப்படிப்பு மாணவர் என்றும், ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாகி கடனில் சிக்கியதால், பணத்திற்காக இந்தக் குற்றத்தை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரீம்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال