சென்னை: நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடலை பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த மார்ச் 27-ஆம் தேதி வெளியான 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'முரட்டுக்காளை' திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடல் மாற்றியமைக்கப்பட்ட வடிவில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இசைஞானி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தனது அனுமதியின்றி பதிப்புரிமை பெற்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது உருமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் பதிப்புரிமை மீறல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த பாடலை திரைப்படத்தில் பயன்படுத்த தடை விதிக்கவும், அதை நீக்க உத்தரவிடவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம். குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்திற்கு எதிரானது என வாதிட்டார்.
வாதங்களைப் பதிவு செய்த நீதிமன்றம், 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் பதிப்புரிமை தொடர்பான விவகாரத்தில் முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
