மெக்சிகோ சிட்டி: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட்-16 ஆட்டத்தில், ஜூட் பெல்லிங்காமின் அபாரமான இரட்டை கோல் மற்றும் ஹாரி கேனின் பெனால்டி கோல் உதவியுடன், இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அடுத்த சுற்றில் இங்கிலாந்து, நார்வே அணியை எதிர்கொள்கிறது.
மெக்சிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம், கடும் மழை மற்றும் மின்னல் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இருந்தாலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இரு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
ஆட்டத்தின் 36 மற்றும் 38-வது நிமிடங்களில் ஜூட் பெல்லிங்காம் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து இங்கிலாந்துக்கு 2-0 என்ற முன்னிலையை ஏற்படுத்தினார். முதல் பாதி முடிவதற்கு முன் மெக்சிகோ வீரர் ஜூலியன் குயினோனஸ் ஒரு கோல் அடித்து வித்தியாசத்தை குறைத்தார்.
54-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜாரெல் குவான்சா (Jarell Quansah) ரெட் கார்டு பெற்று வெளியேறியதால், இங்கிலாந்து மீதமுள்ள ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும், 60-வது நிமிடத்தில் ஹாரி கேன் பெனால்டியை கோலாக மாற்றி அணியின் முன்னிலையை 3-1 ஆக உயர்த்தினார். பின்னர் மெக்சிகோவின் ரவுல் ஜிமெனெஸ் பெனால்டி மூலம் கோல் அடித்தாலும், இங்கிலாந்தின் உறுதியான தற்காப்பை உடைக்க முடியவில்லை.
கூடுதல் நேரத்தில் மெக்சிகோ கடுமையாக தாக்குதல் நடத்தியபோதும், கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டு உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை காலிறுதியில் நார்வே அணியை இங்கிலாந்து சந்திக்க உள்ளது.
