ரூ.277 கோடி கிரானைட் முறைகேடு வழக்கு: வழக்கை ரத்து செய்ய மறுத்த மதுரை உயர்நீதிமன்றம்

 மதுரை: அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து சுமார் ரூ.277.42 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை, மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த ஹரிலால் நசீர், வடிவேலு, கமருதீன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், தங்கள்மீது சட்டவிரோத கிரானைட் குவாரி நடத்தி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, "மதுரா கிரானைட் குவாரி" நிறுவனத்தின் பெயரில் கிரானைட் வெட்ட உரிமம் பெற்றிருந்தவர்கள், 2005 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் அரசு நிலத்தில் சுமார் 69,000 கன மீட்டர் அளவிலான கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த முறைகேட்டால் அரசுக்கு சுமார் ரூ.277.42 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குவாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தாங்கள் நிறுவனத்தில் மேலாளர் மற்றும் ஊழியர்களாக மட்டுமே பணியாற்றியதால், குற்றச்சாட்டில் தங்களுக்கு தொடர்பில்லை என்று வாதிட்டனர்.

ஆனால், குற்றப்பத்திரிகையில் மனுதாரர்களுக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதால், அவர்களின் பங்கு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என நீதிமன்றம் தெரிவித்தது.

இதனால், இந்த கட்டத்தில் வழக்கையோ அல்லது குற்றப்பத்திரிகையையோ ரத்து செய்ய முடியாது என்று கூறி, மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Previous Next

نموذج الاتصال