புதுடெல்லி: வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் எல்என்ஜி (Liquefied Natural Gas - LNG) விநியோகத்தின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு, நாட்டின் உரம், மின்சாரம் மற்றும் பல்வேறு தொழில் துறைகளுக்கு பெரும் நிவாரணமாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் மொத்த எல்என்ஜி தேவையில் சுமார் 65 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சர்வதேச பதற்றம் காரணமாக எல்என்ஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது வளைகுடா கடல் வழிப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறை வட்டாரங்கள் கூறுகையில், இந்தியாவின் பெரும்பாலான உரத் தொழிற்சாலைகள் எல்என்ஜி எரிவாயுவை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் காரணமாக எல்என்ஜி விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கலால் உர உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், வேளாண் துறையிலும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியிருந்தது.
அதேபோல், எல்என்ஜியை பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள், உருக்கு, சிமெண்ட், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டதால், உற்பத்தி குறைவு மற்றும் விலை உயர்வு குறித்த அச்சம் நிலவியது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் சீரடைந்துள்ளதால், எல்என்ஜி விநியோகம் தடையின்றி நடைபெறத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, எல்என்ஜி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நீக்கியுள்ளது.
இந்த அறிவிப்பு, தொழில் துறையின் செயல்பாடுகளை மீண்டும் முழு வீச்சில் தொடங்க உதவும் முக்கிய நடவடிக்கையாக வரவேற்கப்படுவதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
