புதுடெல்லி: உயிர் மற்றும் தனிநபர் சுதந்திரம் தொடர்பான அவசர வழக்குகளை, நீதிமன்றங்களின் வழக்கமான பணி நேரத்தைத் தாண்டியும் உடனடியாக விசாரிக்கும் நடைமுறையை உருவாக்குவது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
வழக்கறிஞர் மஹேரவிஷ் ரெய்ன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நள்ளிரவு கைது, அதிகாலை கட்டிட இடிப்பு, வார இறுதி நாட்களில் நாடுகடத்தல் போன்ற அவசர சூழல்களில், வழக்கமான நீதிமன்ற நேரம் வரை காத்திருக்காமல் குடிமக்கள் அரசியலமைப்பு ரீதியான நிவாரணத்தைப் பெற நிரந்தர நடைமுறை உருவாக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
தற்போதைய நீதிமன்ற நடைமுறையில், குறிப்பிட்ட பணி நேரம், வேலை நாட்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை அமர்வுகளில்தான் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இதனால், இரவு நேரம், வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டாலும், உடனடி நீதியைப் பெற முடியாத நிலை இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உயிர் மற்றும் சுதந்திரம் தொடர்பான அவசர வழக்குகளுக்கு விரைவான நீதியை வழங்கும் நிலையான நடைமுறைகளை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
அதே நேரத்தில், 24 மணி நேரமும் நீதிமன்றங்களை அணுகும் வசதி அவசரமற்ற வழக்குகளுக்காக தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதுதொடர்பாக, அவசர வழக்குகளை பணி நேரத்திற்கு அப்பாற்பட்ட நேரங்களிலும் விசாரிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedures - SOP) உருவாக்குவது குறித்து அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.