சென்னை: “பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்கவே மேலும் ஒரு ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா?” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணமான பெண்ணை பின்தொடர்ந்து சென்று ஆபாச சைகைகள் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக தவெக நிர்வாகி ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாக வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இல்லை என்று முதல்வர் விஜய் மேடைக்கு மேடை பேசி வருகிறார். ஆனால், அவரது சொந்தக் கட்சி நிர்வாகிகள் தொடர்பாக தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்க ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்ட நிலையில், ஆளும் கட்சிக்குள் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது வெட்கக்கேடானது” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை செய்ய நினைப்போருக்கு அது எச்சரிக்கையாக அமையும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழும் சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் விஜயை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.