பள்ளிக்கரணை (Pallikaranai, Chennai):
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தைச் சுற்றியுள்ள 1 கிலோமீட்டர் சுற்றளவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் தடையை நீக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தடையால் சுமார் 1.20 லட்சம் பட்டா நில உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிரெடாய் (CREDAI) சென்னை தலைவர் மெஹுல் ஹெச். தோஷி உள்ளிட்டோர் கூறியதாவது:
பள்ளிக்கரணையில் மொத்தம் 1,248 ஹெக்டேர் பரப்பளவிலான நிலம் கடந்த 2022-ஆம் ஆண்டு ராம்சார் சதுப்புநிலமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படும் வரை, சதுப்புநிலத்தைச் சுற்றியுள்ள 1 கிலோமீட்டர் சுற்றளவில் புதிய கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தடையால் கடந்த 9 மாதங்களாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட 15 பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் ரூ.51,735 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேரடி மற்றும் மறைமுகமாக ரூ.19,790 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 1 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள சுமார் 1.20 லட்சம் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களில் வீடு கட்ட முடியாமலும், வங்கிக் கடன் பெற முடியாமலும், தொழில் நிறுவனங்களின் உரிமங்களை புதுப்பிக்க முடியாமலும் சிரமங்களை சந்தித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 550 ஹெக்டேர் நிலப்பரப்பை நில அளவை எண்கள் மூலம் துல்லியமாக அடையாளம் கண்டு, சதுப்புநிலத்தின் தாக்கம் ஏற்படும் பகுதிகளை அதிகாரப்பூர்வமாக வரையறுக்கும் அரசாணை வெளியிடப்படும் வரை, தற்போதுள்ள 1 கி.மீ. கட்டுமானத் தடையை திரும்பப் பெற வேண்டும் என்று கிரெடாய் சென்னை வலியுறுத்தியுள்ளது.
