ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 6 பேர் இந்தியர்கள்; 2 பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஓமன் கடற்கரை வழியாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்த "மொம்பாசா" மற்றும் "அல் பாஹியா" என்ற யுஏஇ சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலில் கப்பல்களில் தீப்பற்றிய நிலையில், தீ பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், கப்பல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஏஇ அதிகாரிகள் வெளியிட்டதாக கூறப்படும் தகவலின்படி, தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமி மொம்பாசா கப்பலில் பணியாற்றி வந்தவர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், கடல் போக்குவரத்துக்கு எந்தவித தடையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் யுஏஇ வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம், அண்மையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்ட அமெரிக்கா–ஈரான் மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு தாக்குதல்களின் பின்னணியில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.