பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் ஆணைகள் வழங்கினார்; ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை தொடர்கிறது
சென்னை: தமிழகத்தில் புதிய 15 சிபிஎஸ்இ மற்றும் பிற கல்வி வாரியப் பள்ளிகள் தொடங்குவதற்கான தடையின்மைச் சான்றிதழ் (NOC) மற்றும் 10 மெட்ரிக், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு தொடக்கநிலை அனுமதி ஆணைகளை பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் மழலையர், தொடக்கப்பள்ளி, மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியப் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சி அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த பள்ளிகளுக்கு காலதாமதமின்றி அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 16 அன்று 848 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஜூலை 14 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 15 சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியப் பள்ளிகளுக்கு என்ஓசி (NOC) மற்றும் 10 மெட்ரிக், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு தொடக்கநிலை அனுமதி என மொத்தம் 25 ஆணைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் நேரடியாக வழங்கினார்.
இந்த நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை செயலர் பி. சந்திரமோகன், பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் எஸ். சுகன்யா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், சிபிஎஸ்இ, பிற வாரியப் பள்ளிகள், மெட்ரிக், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் தொடங்குவதற்கான அனுமதி பெற, ஜூலை 1 முதல் பள்ளிகள் https://tnschools.gov.in/dms இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், தொடர்ச்சி அங்கீகாரத்திற்காக https://emis.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து தேவையான ஆவணங்களை பதிவேற்றலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.