சென்னை: கொளத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பாக முதல்வர் விஜய் தெரிவித்த கருத்துக்கு திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கடுமையாக பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, “நான் கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே ‘கொத்து பரோட்டா போட்டுவிட்டனர்’ என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார். அவர் 10 நிமிடம் பேசியிருந்தால், மக்களே அவருக்கு பதிலளித்திருப்பார்கள். அவர் எழுதிக் கொடுக்கப்பட்ட உரையைத்தான் பேசுகிறார். அதற்கு மேல் பேசியிருந்தால் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்” என்று விமர்சித்தார்.
மேலும், தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசை குற்றம்சாட்டிய அவர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறினார்.
திமுக பல்வேறு சோதனைகளை கடந்து வளர்ந்த இயக்கம் என்றும், எதிர்காலத்தில் தனித்து வெற்றி பெறும் வலிமை கொண்ட கட்சியாக திமுகவை உருவாக்குவோம் என்றும் ரகுபதி தெரிவித்தார்.
கரூரில் முதல்வர் விஜய் ஆற்றிய பேச்சு ஆணவம் மற்றும் அகங்காரத்தை பிரதிபலிப்பதாகவும், முதல்வரின் பேச்சு பதவிக்கு ஏற்ற வகையில் இல்லை என்றும் அவர் விமர்சித்தார். கூட்டணிக் கட்சிகள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டாலும், அதனை திமுக பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் ரகுபதி கூறினார்.