தாழம்பூர் (Thazhambur, Chennai):
காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்தை, அதே காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) திருடிச் சென்றதாக வெளியாகியுள்ள சம்பவம் காவல்துறையிலும், பொதுமக்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்துள்ள தாழம்பூர் காவல் நிலையத்தில், திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு வாகனத்தை பெற்றுக்கொள்ள வந்த உரிமையாளர், தனது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி இரவு, உதவி ஆய்வாளர் ராஜசேகர் காவல் நிலையத்திலிருந்து அந்த பைக்கை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வந்த ராஜசேகரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, காணாமல் போன பைக் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.
மேலும், மற்றொரு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனமும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில், ராஜசேகர் பணிக்கு முறையாக வராதது, இரவு நேரங்களில் சக பெண் காவலரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களில் ஏற்கனவே சிக்கி, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பறிமுதல் வாகனத்தையே காவல் அதிகாரி ஒருவர் திருடியிருப்பது, காவல்துறையின் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.