தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 10 டன் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறினார். தமிழக எல்லைப் பகுதிகளில் வெளிமாநிலக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கழிவுகளை கொண்டு வந்தவர்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கோயில் நிலத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தமிழக அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.