அங்காரா (
Ankara, Türkiye):
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இனி நடைமுறையில் இல்லை என்றும், ஈரானுடனான பேச்சுவார்த்தை நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற North Atlantic Treaty Organization உச்சி மாநாட்டின் போது, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே உடன் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “என்னைப் பொறுத்தவரை ஈரானுடனான தற்காலிக ஒப்பந்தம் முடிந்துவிட்டது. அவர்கள் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, பின்னர் பொதுவெளியில் மறுக்கிறார்கள். அவர்களுடன் இனி நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று நான் நம்பவில்லை” என்று கூறினார்.
மேலும், “பேச்சுவார்த்தை தொடரலாம். ஆனால் அது நேரத்தை வீணடிப்பதாகவே நான் கருதுகிறேன்” என்றும், ஈரான் தலைமையை கடுமையாக விமர்சித்தும் ட்ரம்ப் கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் தளங்கள் மற்றும் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது. அதேசமயம், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.
இதற்கு பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா–ஈரான் இடையேயான இந்த புதிய மோதல், மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் உலக எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தால் சர்வதேச கச்சா எண்ணெய் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.
